பாடல் எண் :1133
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புக ழாரூ ரரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.

2
பொ-ரை; நெஞ்சமை! பந்தமும், வீடுமாயிருக்கும் தேவதேவனாகிய திருவாரூர்ப் பெருமானுக்குரிய முடிவற்ற புகழ் வாய்ந்து திரு வாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு எவ்வளவு பெருந்தவம் நீ செய்தனை? (திருவாரூர், அரநெறியை உள்ளத்திற்கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நற்றவத்தார்க்கு அன்றி எய்தொணாது என்றபடி).
கு-ரை; நெஞ்சமே! எந்த மாதவம் செய்தனை - மனமே மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்! இது வியப்புமொழி. பந்தம் - உலக ஈடுபாடு. பந்தமும் வீடுமாயவன் என்றபடி. அந்தமில்புகழ் - முடிவில்லாத புகழ். ஆரூர் அரநெறி என்பது ஆரூர்த் திருக்கோயில்களில் பூங்கோயில், அரநெறி, பரவை யுண்மண்டளி என்பவற்றுள் ஓன்று. சிந்தையுள்ளும் சிரத்துள்ளும். சிந்தை - உள்மனம். நிலையான நினைப்பு உண்டாக்கும் அடி மனம். `அரநெறி சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்க எந்த மாதவம் செய் தனைழு என்றியைக்க.