|
பாடல் எண் :1134 | வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக் கிண்டை மாலை புனைந்து மிராப்பகல் தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க் கண்ட மாளவும் வைப்பரா ரூரரே. |
| 3 | பொ-ரை: வண்டுகள் அணுகப்பெறாது சூழ உலாவும் மலர்களைக்கொண்டு வளரும் சடைக்கு இண்டை மாலைகள் புனைந்தும், இரவும் பகலும் தொண்டுகள் புரிந்தும் தொடர்ந்து விடாது வழிபடுவார்க்கு அண்டங்களை ஆளவும் கொடுக்கும் பெருமான் திருவாரூரர் ஆவர். ஆளவும் என்னும் எச்ச உம்மையால் சிவஞானமாகிய முக்கியப் பயனைத் தருவதோடு என்க்கொள்க. கு-ரை: சரியைத்தொண்டு செய்வார்க்கு உளதாம் அவாந்தரப் பயனைக் கூறுகிறது இத்திருப்பாடல். வண்டுலாமலர் - வைகறையில் வண்டுகள் தேனுண்ண வருவதன்முன்பே எடுத்த மலர் ஆதலின் ஆண்டு உள்ள தேனை நுகர்தற்கு வண்டுகள் உலாவுகின்றன என்றவாறு. வளர்சடை - வளர்கின்ற திருச்சடை. புனைந்தும் - தொடுத்தும். இராப்பகல் - இரவும் பகலும். தொடர்ந்துவிடாதவர்க்கு - இப்பணிகளை மேற்கொண்டு இடையே விடாது தொடர்ந்து பணிசெய்வார்க்கு. அண்டம் ஆளவும் வைப்பர் - உலகமுழுவதையும் ஒரு குடைக்கீழ் அரசாளும் உரிமையைத் தருவதும் செய்வர். 'துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண்ணேறலாகும்' என்றார் பிறாண்டும். |
|