|
பாடல் எண் :1137 | எம்மை யாரிலை யானுமு ளேனலேன் எம்மை யாரு மிதுசெய வல்லரே அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற் கம்மை யாரைத்தந் தாராரூ ரையரே. |
| 6 | பொ-ரை: எம்மைக்காத்தற்குரிய இருமுதுகுரவரும் இலர்; யானும் (இளம் பருவத்தினன் ஆகலின்) தனித்து வாழும் மன உறுதி உள்ளேன் அல்லேன்; எனது அன்னையை ஒத்த உடன்பிறந்தாரும் (திலகவதியாரும்) இதனைச் செய்ய (எனக்குத் துணையாய் நின்றருள) வல்லரே! (ஆயினும் அவர் இதுபோது உயிர்விடத் துணிதலின்) தாயாய் உடனிருந்து உபகரிக்கவல்லார் ஆர்? என்று இங்ஙனம் பன்முறை வாய்விட்டு அரற்றிய எளியேனுக்குத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானே (ஐயரே) வீட்டு நெறிக்கு உரிய என் உடன் தோன்றினாரை (உயிர்தாங்கச் செய்து) எனக்கு இருமுதுகுரவரும், ஆசானும், கேளும், உறவுமாக வைத்தருளினார். இப்பாட்டு நாவுக்கரசர், முதல்வன் தமது தமக்கையாரை உம்பருலகணைய உறும் நிலை விலக்கி உயிர்தாங்கி மனைத்தவம் புரிந்திருக்க வைத்தது தாம் பின்னர் மெய்யுணர்வு பெற்றுத் திருத்தொண்டின் நெறி பேணி உய்தற்பொருட்டே என நினைந்து பாடியது. கு-ரை: முதல் அடியில் எம் ஐயர் என்பது நீண்டு நின்றது; ஐயர் - தாய் தந்தையர் என்னும் இரு முதுகுரவர். இரண்டாம் அடியில் எம்மையார் என்றதில் என் அம்மை, எம்மை என ஆகி ஆர்பெற்றது. இங்கு நாவுக்கரசருக்குத் தமக்கையாராகிய திலகவதியாரைக் குறிக்கும். இது - என்றது தாம் இன்றியமையாததாக உணர்ந்த நற்சார்பாய் உடனிருத்தலை, ஆயினும் இதுபோது அவர் உயிர்விடத் துணிதலின் என்றது இசையெச்சம். அம்மை யார் எனக்கு? என்றதில் அம்மை - அம்மைக்கு வாயிலாவார் அல்லது தாய்போல்வார் எனப் பொருள்படும். அம் ஐ எனப்பிரித்து அழகிய ஆசான் என உரைப்பினும் அமையும். அம்மை - வீடு. இப் பாட்டுப் பெரியபுராணத்துத் திலகவதியார் உயிர்தாங்கும் செய்தி கூறும் பகுதிக்கு அகச்சான்று ஆதல் காண்க. ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் திருவிருத்தத்தில் உடன் தோன்றினராய் என்றதும் திலகவதியாரைக் குறித்தே எனக்கொள்க. |
|