|
பாடல் எண் :1138 | தண்ட வாளியைத் தக்கன்றன் வேள்வியைச் செண்ட தாடிய தேவர கண்டனைக் கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க் கொண்டி யாயின வாறென்றன் கோதையே. |
| 7 | பொ-ரை: என்றன் கோதையாகிய இவள் தண்டத்தை (ஒறுப்பு முறை)க் கையாள்பவனும், தக்கன் செய்த பெருவேள்வியைச் செண்டு ஏந்தி ஆடுதல்போல் எளிதாக அட்ட தேவர்கள் முதல்வனும் ஆகிய ஆரூர் வீதிவிடங்கனை (அவன் உலாப்போதரும்போது) பன்முறை கண்டு அவனைக் காதலித்து அன்பே வடிவாய் நம் வயப்பட்டு ஒழுகாத கொண்டி (பட்டி) ஆயினவாறு என்னே! கு-ரை: இது தன் மகள் முதல்வனைக் கண்டு காதலித்துப் பின் அவனைக் காணுந்தோறும் காதல் கைமிக்குப் பிச்சியாயினமையை வியந்து செவிலி கூறியது. தண்டம் - அறத்தின் மூவகைகளில் மூன்றாவதாகிய ஒறுப்பு. இதனை ஆண்டவன் தண்ட ஆளி. தக்கன் வேள்வியைத் தகர்த்தது ஒப்ப நாடிச் செய்த ஒறுப்புமுறையே என்றற்கு முதல்வனை இப்பெயரால் குறித்தார். அகண்டன் - கண்டிக்கப்படாதவன். தேசகாலப் பொருள்களால் எல்லைசெய்யப்படாதவன் என்பது கருத்து. முதல்வன் தேசம் காலம் பொருள் அனைத்தையும் தன் பேரருளில் அடங்கக் கொண்டு நிறைநீர்மை உடையன் ஆகலின் அகண்டன்; அஃது ஈண்டு முதல்வன், தலைவன் என்னும் துணையாய் நின்றது, ஆதலின் தேவர் அகண்டன் என்னும் தொடர் தேவர்க்கு முதல்வன் என விரியும். கொண்டி - (காதலால்) கொள்ளப்பட்டவள், பிச்சி. |
|