|
பாடல் எண் :1144 | பாற லைத்த படுவெண் தலையினன் நீற லைத்தசெம் மேனியன் நேரிழை கூற லைத்தமெய் கோளர வாட்டிய ஆற லைத்த சடையன்னி யூரனே. |
| 1 | பொ-ரை: பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டைஓட்டைக் கையிற் கொண்டவனும், திருநீறு பூசிய சிவந்த மேனியனும், உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும், அரவு ஆட்டி ஆறலைக் குஞ் சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே. கு-ரை: அன்னியூரன் இயல்புரைக்கின்றது இத் திருப்பதிகம். பாறு - பருந்து. படுவெண்டலை - தசை அழிந்த வெள்ளிய தலை. நீறு அலைத்த திருநீறுவிரவிய. நேரிழை - பார்வதி. கூறு - இடப்பாகம். அலைத்த - கலந்த. மெய் - உடம்பில். கோள் அரவு - கொள்ளும்தன்மை வாய்ந்த வாயையுடைய பாம்பு. நஞ்சாகிய குற்றம் உடைய பாம்பு எனினுமாம். ஆட்டிய - ஆடுதலைச் செய்யும்படி அணிந்த. ஆறு - கங்கை. அலைத்த - பரந்துவிரிந்த. |
|