பாடல் எண் :1152
எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றாரன்னி யூரரே.

9
பொ-ரை: தீவண்ண மேனியரும், எலும்பணிந்து இன்புறுவாரும்,திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும், மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
கு-ரை: எரிகொள்மேனி - நெருப்பினது சிவந்த நிறத்தைக் கொண்ட திருமேனி. மூவெயில் - மூன்று கோட்டைகள். செற்றவர் - அழித்தவர்.