பாடல் எண் :1157
அட்ட மாமலர் சூடி யடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக விருக்கு மிடமிதே.

4
பொ-ரை: எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்டவடிவாகிய புன்சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நட்டம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமோ?
கு-ரை: அட்டமாமலர் - சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறிய எட்டு மலர். `எட்டுக் கொலாமவர் சூடும் இனமலர்ழு (தி.4.ப.18.பா.8.) என்றார் முன்னும். புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியா வர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டும் புலரிக்காலத்துக்கு உரியவை. அடும்பு - அடப்பமலர். வட்டப்புன்சடை - வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்.