|
பாடல் எண் :1162 | குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை இறைக்காட்டியெடுத் தான்தலை யீரைந்தும் மறைக்காட் டான்இறை யூன்றலும் வாய்விட்டான் இறைக்காட் டாயெம் பிரானுனை யேத்தவே. |
| 10 | பொரை: தன்பாலுள்ள குறையைக் காட்டாதவனாகிய இராவணன் ஏறிவந்த தேர் வழிச்செல்லுதலைத் தடுத்த திருக்கயிலாய மலையைச் சிறுபோது தன்வலிகாட்டி எடுக்கலுற, அவன் பத்துத் தலைகளும், மறைக்காட்டுப் பெருமானே! நீ சிறிது திருவிரல் ஊன்றுதலும், வாய்விட்டரற்றினன். எம்பெருமானே! நீ அடியேன் உனை ஏத்துதலால் எனக்கு இறப்பைக் காட்ட மாட்டாய்; இறவாத இன்ப அன்பே காட்டுவாய் என்றபடி. கு-ரை: குறைக்காட்டான் - குறைக்கு ஆள்தான் எனப்பிரித்து, குற்றங்களுக்கு ஆளாயிருப்பவன் இராவணன் எனினும் அமையும். விட்ட - செலுத்திய. குத்த - முட்ட. மாமலை - பெருமைக்குரிய திருக்கயிலைமலை. இறைக்காட்டி எடுத்தான் - சிறிது நேரம் தன் தலைமையின் பெருமையை நந்திதேவர்க்கறிவித்துத் தூக்கினவன். இறை - சிறிது. வாய்விட்டான் - அலறினான். இறைக்காட்டாய் - இறப்பைக்காட்டமாட்டாய்; இறை - இறப்பு. இறைவனை ஏத்துவார்க்கு இறப்பொடு பிறப்பில்லை என்றபடி. |
|