பாடல் எண் :1163
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

1
பொ-ரை: பண்ணையொத்த மொழியாளாகிய உமை அம்மையை ஒருபங்கிற் கொண்டவரே! மண்ணுலகத்தவர் வலம் புரியும் மறைக்காட்டுறையும் பெருமானே! அடியேன் என்கண்களால் உம்மைக் காணுமாறு, வேதங்களால் அடைக்கப் பெற்ற இக்கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள்செய்வீராக.
கு-ரை: கண்களால் உமது திருக்காட்சியைக் காணத் திருக் கதவைத் திறந்தருள்வீராக என வேண்டியது இத் திருப்பதிகம் பண்ணினேர் மொழியாள் திருமறைக்காட்டு அம்பிகையின் திருப்பெயர். யாழைப் பழித்த மொழியம்மை என்றும் வீணா விதூஷிணி என்றும் இன்றும் வழங்குகிறது. மொழியாளாகிய உமை என்க. பங்கர் - ஒருபாகத்தே உடையவர். மண்ணினார் - நிலவுலகிலே உள்ள மக்கள். திண்ணமாக - உறுதியாக.