பாடல் எண் :1167
மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.

5
பொ-ரை: திருமலையைப்போல் அழியாதிருக்கும் மறைக்காட்டுறையும் பெருமானே! கலைகள் வந்திறைஞ்சிக் கழல் ஏத்தப் படுபவரே! விலைமதிப்பற்ற செம்மணிவண்ணத் திருமேனியரே! தொலைவில்லாத இக்கதவுகளைத் திறந்தருள்வீராக.
கு-ரை: மலையின் நீடு இருக்கும் மறைக்காடு - திருக்கயிலை ஊழிகளில் அழியாது நிற்றல்போலத் தானும் அழியாது நீடுதலாக இருக்கும் மறைக்காடு. இதுபோன்று ஊழிக்காலத்தும் ஒடுக்கம் கூறப்படாத தலங்கள் பிரளயஜித் எனப்படும்.
இரண்டாம் அடி; கலைகளின் ஆசிரியர்களும் அவற்றைக் கற்றோரும் வந்திறைஞ்சும் திருவடிகளையுடையவர்; அவற்றால் உரைக்கப்படும் ஏத்தாகிய பொருள்சேர் புகழை உடையர். (கலைகளின் தெய்வம் வந்திறைஞ்சி ஏத்தும் எனினும் பொருந்தும் - இக்காரணம் பற்றியே மறைக்காடு எனப்பட்டது) தொலைவிலா - நீக்கப்படாத, திறக்கப்படாத. துணைநீக்கும் -இணைந்துள்ள நிலையை நீக்கும், திறப்பியும் என்றபடி.