|
பாடல் எண் :1173 | அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க விக்கத வந்திறப் பிம்மினே. |
| 11 | பொ-ரை: பெருகும் புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டுறையும் பெருமானே! இராவணனை விரலால் அடர்த்திட்ட நீர் எளியேன்பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராயுள்ளீர்! எம்பெருமானீரே! விரைந்து. இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக. கு-ரை: பத்துத் திருப்பாடல்களை பாடியும் கதவு திறவாமையைக் கண்ட அப்பர் பெருமான் இரக்கமில்லையோ! எனக்கூறிய இப்பாடலின் உரை கேட்டு நாவரசரின் பாமாலையினிசையில் ஈடுபட்டிருந்த இறைவன் விரைந்து கதவைத் திறந்தனன். அரக்கன் - இராவணன். அடர்த்திட்ட - நெருக்கியருள் செய்த. இரக்கமொன்றிலீர் - இன்று இரக்கம் சிறிதும் என்பால் இலராயினீர். சுரக்கும் பெருகிய, தேனைச் சுரக்கும் எனினும் அமையும். சரக்க - விரைவாக. |
|