|
பாடல் எண் :1180 | படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் நீற்றினன் விடைகொ ளூர்தியி னான்திரு மீயச்சூர் இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே. |
| 7 | பொ-ரை: பூதங்களைப் படையாகக் கொண்டவனும், கொன்றைமாலையனும், சடையில் வெள்ளம் உடையவனும், சாந்த வெண்ணீற்றனும், விடையூர்தியானும், திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செல்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன். கு-ரை: படைகொள்பூதத்தன் - பூதப்படையினன். பைங்கொன்றை - புதிய கொன்றைமலர். சாந்தவெண்ணீற்றினன் - வெண்ணீற்றைச் சாந்தமாகக் கொண்டவன். ஏனையவும் இவ்வாறே வெள்ளங்கொள் சடையன், விடையூர்திகொள்வான் எனச்சொன்னிலைமாற்றிப் பொருள் கொள்ளப்படும். இடை - சமயம், செவ்வி. காலம் நன்கு உணர்ந்து திருக்கோயிலுக்குச் சேறல்வேண்டும் என்றபடி. |
|