பாடல் எண் :1185
ஏற்று வெல்கொடி யீசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.

2
பொ-ரை: பிற கொடிகளை வென்று மேம்பட்ட ஆனேற்றுக் கொடியையுடைய ஈசன் தனக்குரிய ஆதிரை நாளில், தான் வேறு வேறு கோலங் கொண்டு காட்சியளித்தற்கு இடமாகிய திருவீழிமிழலையில் தாம் சந்தனம் எனக்கொண்டு பூசிவந்த வெள்ளை நீற்றைக் கொள்ளாது மணமுள்ள பொருள்களைச் சூடிக்கொள்வர்; மிக நல்லமதியைச் சூடு வோராகவும் உளர். சந்தன வெள்ளை நீற்றை விரவல் உடையராய் (அணிந்து) நாற்றம் சூடுவர் (நறுமலர் அணிவர்) என்றுரைப்பினும் அமையும்.
கு-ரை: ஏற்றுவெல்கொடி - இடபமாகிய வெல்லுங்கொடி. ஆதிரை -திருவாதிரைத் திருநாளில். நாற்றம் - மணமுள்ள கஸ்தூரி புனுகு முதலிய பொருள்கள். நன்னறும் - நல்லமணமுள்ள. நீற்றுச்சந்தன வெள்ளை - சந்தனமாகக் கொள்ளப்படும் வெள்ளை நீறு. "வெந்த சாம்பல் விரையெனப்பூசி" (தி.3.ப.54.பா.3) என்றல் காண்க. விரவலார் - அணியாது. வேற்றுக்கோலம் - பல வேறு கோலங்களைக் கொள்ளும் இடம். நூல்களுட் கூறியபடி யோகியாகத் தோன்றாது போகியாகவும் காட்சி தருகிறான் என்றபடி.