|
பாடல் எண் :1186 | புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான் வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான் நினைய நின்றவ னீசனை யேயெனா வினையி லார்தொழும் வீழி மிழலையே. |
| 3 | பொ-ரை: சூலம் உடையவனும், விடை ஊர்தியனும், வினைகளை வென்றவனும் நாகத்தைப் பூண்டவனும், வெண்மழு வாள் உடையவனும், அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும், இருவினையற்ற மேலோர் தொழும் வீழிமிழலை இறைவனே. கு-ரை: புனைபொன்சூலம் - அலங்கரிக்கப்பெற்ற பொன்னாலாகிய சூலம். போர்விடை - போர்செய்யும் ஆற்றலோடுகூடிய இடபம். வினைவெல் நாகத்தன் - இருவினைகளை இயல்பாகவே வென்றவனும் நாகத்தனும். வெண்மழுவாள் - வெண்மையான மழுவாயுதமாகிய வாள். நினைய நின்றவன் - நினைப்பதற்குரியவன். ஈசனையே - ஈசனே. ஐசாரியை. எனா - என்று. வினையிலார் - வினைகளின் நீங்கினார். ஈசனே என (அடியவர்கள்) இனைய நின்றவன் எனப் பிரித்தால் மோனை கெடாது. |
|