பாடல் எண் :1189
குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணு முணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே.

6
பொ-ரை: குழலையும், யாழையும் போன்ற மொழியாரை வேட்கையினால் இசையும், உழலும் உடலைத் தீநெறியின்கண் ஊன்றும் நல்லுணர்வற்றவர்களே! நெருப்பை நீர் மடியின்கண் கொண்டு கெடாதீர்; பன்முறையினும் சாற்றினோம், மிழலையான் திருவடி சார விண்ணாளும் திறம் பெறலாம்.
கு-ரை: குழலை - என்றதில் ஜ சாரியை; குழலும் யாழும் போன்ற இசையோடு கூடிய மொழியாரிடத்து வைக்கும் வேட்கையால் உடலைப் பேணும் அறிவிலீர் என்றபடி . ஊணும் - ஊன்றும். உணவும் மருந்தும் உண்டு வலிவுறச் செய்கின்ற; உண்பிக்கும், ஊட்டும் எனினும் அமையும். அங்ஙனம் பேணுதல் நெருப்பை மடியிற் கட்டிக் கொள்வது போன்றது என்கிறார் அப்பர்.