பாடல் எண் :1194
மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலின் திருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே.

11
பொ-ரை: இளமையான ஆனேறுடைய உமைமணாளனது திருக்கயிலாயமலையைச் சுழல ஆர்த்து எடுத்த இராவணனது முடியும் தோளும் இறும்படியாக அவன் தன் கழலணிந்த திருவடியில் உள்ள ஒரு திருவிரலால் ஊன்றுதலும், அவ்வரக்கன் திருவீழிமிழலையானடி வாழ்க என்று வாய்விட்டரற்றினன். அரற்றவே உமைமணாளன் அவனை மேலும் ஒறுக்காமல் விடுவித்தனன்.
கு-ரை: மழலை - இளமை. ஏற்று மணாளன் - அத்தகையவிடையையுடைய (உமை) மணவாளன்; மணாளக் கோலத்துடன் இருப்பவன். சுழல - அசைந்து நிலை திரியலுற. ஆர்த்து - தன் வலிமையைப் பெரிது என எண்ணி ஆரவாரித்து. எடுத்தான் - தூக்கியவன். முடி தோள் - முடியும் தோளும். இற - நெரிய. விரலால் ஊன்றினவுடன் அரக்கன் அலறி மிழலையாள் அடிவாழ்க என வாழ்த்திப் பாடினன். வாழ்த்தவே இறைவன் அவனை மேலும் ஒறுக்காமல் விட்டான் என்க.