பாடல் எண் :1199
கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.

5
பொ-ரை: மூலப்பொருளாக உள்ளவனே! கருவாயுள்ளாய் என்று தெளிந்தவர்க்கெல்லாம் ஒப்பற்றவனே! உயிர்ப்பாகவும், உணர்வாகவும் நின்ற செல்வனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குருமூர்த்தியே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
கு-ரை: கருவன் - எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாய் உள்ளவன். கருவாய்த் தெளிவார்க்கு ஒருவனே - மூலப் பொருளாய் இருப்பவன் என்பதைத் தெரியும் அறிவினை உடையார்க்கு பலராக ஒருவன் என நின்றவனே; ஒன்றவன்தானே, ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்றாற்போல உணரநிற்றல்.
உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற திருவன் - பிராணனாயும் உணர்வு வடிவாயும் இருக்கின்ற செல்வன். குருவன் - குருவடிவானவன்.