பாடல் எண் :1200
காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேயம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

6
பொ-ரை: ஏழுலகங்களையும் கருணையால் காத்தவனே! அமரர்க்கு ஆப்தனே! அயன்றலையைக் கையில் சேர்த்தவனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கூத்தப்பெருமானே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
கு-ரை: காத்தன் - காத்தவன். பொழில் ஏழு - ஏழு உலகம். காதலால்- அன்பால். ஆத்தன் - ஆப்தன். நம்பத் தகுந்தவன்; தான் உண்மையை உணர்ந்து உள்ளவாறு எடுத்துரைப்போன். எனவே அமரர்க்குப் பிரமாண நூல்களை அருளியோன் என்பது கருத்து. அயன்றலை சேர்த்தன் - பிரமன் தலையைக் கையில் கபாலமாகச் சேர்த்தவன். காதலால் காத்தலும், நூலான் உணர்த்தலும், செருக்கு எய்திய வழி ஒறுத்தலுமுடைய கூத்தன் என்பது பாட்டின் திரண்டபொருள்.