பாடல் எண் :1203
அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ னேயுணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.

9
பொ-ரை: தேவர்கள் அசுரர்களுடன் கூடிக்கடைதலால் எழுந்த நஞ்சினை உண்ட தேவனே! விரிந்த வான் பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையிற் கோயில் கொண்டவனே! உணர்வு சிறிதும் இல்லேனாகிய அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
கு-ரை: அண்டவானவர் - மேல் உலகிலுள்ள தேவர்கள், வானவர் (அசுரருடன்) கூடிக் கடைந்த என்க. வானவன் - உயர்ந்தவன். உணர்வு - அறிவு. விண்ட - மலர்கள் விண்ட, மலர்ந்த பூக்களை உடைய. வான்பொழில் - உயர்ந்த சோலை. வீழிமிழலையுள் கொண்டன் - வீழிமிழலையின் உள்ளிடத்தைத் தனக்கு இடமாகக் கொண்டவன்.