பாடல் எண் :1210
ஏற தேறு மிடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்
ஊறி யூறி யுருகுமெ னுள்ளமே.

6
பொ-ரை: விடையினை உகந்தேறும் இறைவரும், தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும், ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது.
கு-ரை: ஏறதேறும் - இடபமேறும். கூறுவார் - தன்னாமம்சொல்லிப் புகழ்ந்து போற்றுவார். வினை - துன்பத்திற்குக் காரணமாகிய வினை. என் உள்ளம் ஊறி ஊறி உருகும் - என் மனமானது நெக்கு நெக்கு உருகும்.