|
பாடல் எண் :1215 | முற்றி லாமதி சூடும் முதல்வனார் ஒற்ற னார்மலை யாலரக் கன்முடி எற்றி னார்கொடி யாரிடை மருதினைப் பற்றி னாரைப் பற்றாவினை பாவமே. |
| 11 | பொ-ரை: இளம்பிறை சூடும் முதல்வரும், மலையால் அரக்கன் முடியை விரலைச் சிறிது ஊன்றி ஒற்றியவரும், இடபக்கொடியை உடையவரும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள இடைமருதூரினைப் பற்றியவர்களை வினைகளும் அவற்றான் வரும் இடர்களும் பற்றமாட்டா.கு-ரை: முற்றிலாமதி - குழவித் திங்களாகிய பிறைமதி. ஒற்றினார் - அரக்கன் முடியை மலையால் ஒற்றினார்; அதுவே அவனை அழவைத்தது என்க. எற்றினார் கொடியார் - ஏற்றுக் கொடியார். எற்றனார் குறுக்கல் விகாரம். பற்றினார் - இடைமருதீசனைப் பற்றுக்கோடாய்க் கொண்டு வாழ்வார். இடைமருதீசனைப் பற்றியவர்களை வினை பாவம் பற்றா என்க. வினை - தூலவினை எனப்படும் ஆகாமியம்; பாவம் - அதன் சூக்கும நிலையாகிய அபூர்வம் (காணப்படாதது). |
|