|
பாடல் எண் :1216 | பறையி னோசையும் பாடலி னோசையும் மறையி னோசையும் வைகு மயலெலாம் இறைவ னெங்கள் பிரானிடை மருதினில் உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே. |
| 1 | பொ-ரை: பறை, பாடல், மறை ஆகிய மூன்றின் ஓசைகளும் தங்கியிருக்கும் வயற்புறங்களை உடையதும், இறைவனாகிய எங்கள் பிரான் எழுந்தருளியிருப்பதுமாகிய இடைமருதூரினில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்குகின்றது. கு-ரை: பறை - தோற்கருவி வாச்சியங்கள். பாடலின் ஓசை - இசைப்பாடல்கள் பாடுவார் எழுப்பும் ஓசை. மறையின் ஓசை - வேதமுழக்கம். எங்கும் - அயலெலாம் - ஊர்ப்பரப்பு முழுதும். வைகும் - தங்கும்; இது இடைமருதிற்குரிய அடை. உள்கும் - நினைக்கும். |
|