பாடல் எண் :1221
மங்கை காணக் கொடார்மண மாலையை
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீரிடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே.

6
பொ-ரை: பெண்களே, இடைமருதர் இந்த என்மகளாகிய நங்கைக்குக் கொன்றையைக் கொடுத்துள்ளார் (கொன்றை மலரின்நிறமாகிய பசலையைக் கொடுத்துள்ளார்.) ஆயின், அவர் மார்பில் தாராக உள்ள மணமாலையைக் கொடுப்பின், பக்கத்தில் இருக்கும் பார்வதி காண்பள்; ஆகலின் அதனைக் கொடுத்தல் இயலாது. இனித் தமது முடியின் கண்ணதாகிய கண்ணியையும் கங்கை ஆண்டிருந்து காண்பாள் ஆகலின் கொடுத்தல் இயலாது. மற்று எங்கிருந்து இப்பசலையாகிய கொன்றையைப் பெற்று இவளுக்கு இவர் கொடுத்தது?
கு-ரை: இறைவன் மார்பில் தார் ஆவதும் கார்க்கொன்றை, முடிக்கண் கண்ணியாவதும் கொன்றை - இவ்விரண்டிடத்தன்றி வேறு எங்குப் பெற்றுக் கொடுத்தது என்க. இதழி - கொன்றை, பசலை. தலைவி இடைமருதீசர்மேல்கொண்ட காதலால் உடல் பசந்தாள். பொன்னிறப் பசலை உடம்பெல்லாம் பூத்தது. அதை ஏளனம் செய்யும் தோழியர் அப் பொன்னிறப்பசலையை இறைவரளித்த கொன்றை மாலையைக் கற்பித்து, பார்வதி கங்கைக்குத் தெரியாமல் இறைவர் எங்கு வாங்கித் தந்தார் இக்கொன்றையை என்று தலைவியை நகையாடுகின்றனர்.