பாடல் எண் :1223
கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணங்கி லாநெறி கண்டுகொண் டாரையும்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.

2
பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர். கல்லாதவரையும், கற்று வல்லவரையும், வணங்காத நெறியைக் கட்டிப் பேசும் வீணரையும், தணக்கும் இயல்புடையவர்; எப்பொருளையும் தணிப்பவர் (ஒடுக்குவர்); பிணக்கும் இயல்பினரும் ஆவர்.
கு-ரை: கணக்கிலார் - அளவு படாத நெஞ்சினர், நன்னெறியில் நின்று ஆராய ஒருப்படாத நெஞ்சினர் என்றபடி, கல்லாதவர் எனினும் அமையும். கற்றுவல்லார் - கற்றதனால் யாம் எல்லாம் வல்லேம் எனக்கருதிச் செருக்குவோர். வணக்கிலா நெறி கண்டு கொண்டோர் - முதல்வனை உணர்ந்து பணிதல் வேண்டும் என்னும் கொள்கையில்லாத சழக்கு நெறியை நன்னெறி எனத் தம் புல்லறிவால் துணிந்து கொண்டோர். எப்பொருளையும் தணிப்பார், பிணக்குவார் என்க; ஒடுக்கித் தோற்றி நடத்துவார் என்பது கருத்து.