|
பாடல் எண் :1224 | சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும் பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே. |
| 3 | பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர், மழை சொரிவிப்பார்; திங்களைச் சூழ்கதிர் விரிவிப்பார்; ஞாயிற்றின் கண் பொருந்தியவிளங்கொளியை எரிவிப்பார்; எப் பொருளையும் தணிவிப்பார், அவற்றைப் பிரிவிக்கும் இயல்பினரும் ஆவர். கு-ரை: சொரிவிப்பார் மழை - மழையை வேண்டுங் காலத்துப் பெய்யச் செய்வார். சூழ்கதிர்த் திங்களை விரிவிப்பார் - சந்திரனை நிலவுக்கதிர் விரித்தின்புறுத்தச் செய்வர். வெயில்பட்ட விளங்கொளி - வெயில் ஒளி பொருந்தி விளங்குகின்ற சூரியனை. எரிவிப்பார் - உலகில் விளங்கச் செய்வார். எப்பொருளையும் தணிப்பார் - எப்பொருளின் ஆற்றலையும் நிகழாதபடி அடங்கி நிற்கச் செய்வார். பிரிவிப்பார் - இணைந்து நிற்கும் எப்பொருளையும் பிரிக்க வேண்டுங்காலத்துப் பிரியச் செய்வார் (செல்வம், வளம் முதலியன ஓரிடத்தில் நில்லாமே இடம் பெயர்ந்து வருதல் காண்க.) |
|