|
பாடல் எண் :1227 | திருக்கு வார்சூழற் செல்வன சேவடி இருக்கு வாய்மொழி யால்தனை யேத்துவார் சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப் பெருக்கு வாரவர் பேரெயி லாளரே. |
| 6 | பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர், வளைந்த நீண்ட குழலாளை உடைய செல்வராகிய தம்மடியை இருக்குவேதம் முதலிய மெய்ம்மொழிகளால் ஏத்துவார்களின் துயரைச் சுருக்குவார்; அவை தோன்றுகின்ற நெறி அறுமாறு அருளைப் பெருக்குவார். கு-ரை: திருக்கு - வளைத்து முறுக்கி முடித்த. வார் குழல் - நீண்டகூந்தல், இங்கு உமை. செல்வன - உமையைப் பாகங்கொண்ட செல்வனான சிவபெருமானுடைய. இருக்கு வாய் மொழியால் - இருக்காலும் தம் வாய் மொழியாலும் (இருக்கு - வேதம்); தன்னை, சேவடியை எனக் கூட்டுக. துயர் சுருக்குவார் என்க. ஆற்றற - வலிகெட. தோற்றங்கள் ஆற்றறப் பெருக்குவார் - துயர்களின் தோற்றங்கள் வலிகெடும்படி, சிவபுண்ணியச் செயல்களைப் பெருக்குவித்துத் தமக்கு அன்பராகச் செய்து கொள்வர். |
|