பாடல் எண் :1228
முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனின் தானோர் தலைமகன்
என்னை யாளுமி றையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.

7
பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர் எனின் அவர், முன்னே தோன்றியவர்; மயிலை ஊர்தியாக உடைய முருகவேளின் தாதையார், ஒப்பற்ற முதல்வர்; என்னையாளும் இறைவரும் எம்பிரானுமாவர்; புதியரிற் புதியரும் அவரே.
கு-ரை: பேரெயிலாளரே எனின், அவர் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியர் ஆதல் முதலிய தன்மையர் என்க. மயில் ஊர்தியையுடைய முருகவேள் தன் ஐயார் (தந்தையார்) என்க. மயில் ஊர்தி - மயிலாகிய ஊர்தி (வாகனம்). எனின் என்பதை அசைநிலையாகக் கொள்ளினும் அமையும்.