பாடல் எண் :1229
உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கு மன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.

8
பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர், உழைத்தும், துள்ளியும், தம் உள்ளத்துள்ளே உருவத்தை இழைத்தும் எந்தையே! பிரானே! என்று இரவும் பகலும் இடைவிடாது அழைக்கும் அன்பர்கள் இயற்றிய பிழைகளை நீக்கும் தன்மை உடையவராவர்.
கு-ரை: உழைத்தும் - மெய்வருந்தும்படித் திருப்பணிகள் செய்தும்; துள்ளியும் - பேரின்பமேலீட்டால் ஆடியும்; உள்ளத்துளே உரு இழைத்தும் - இறைவன் திருவுருவைச் செம்மையாக மனத்தில் சிந்தித்தும். பிழைப்பு - செய்த பிழையின் பயனாகிய துயர்; பிழைப்பு நீக்குவர் என்பதற்கு அடியார் எக்காரணத்தாலோ செய்யும். குற்றத்தைத் தான் ஏற்றுக்கொண்டு அவர்க்கு. அத்தீங்கு வாராமே காப்பன் என்றுரைப்பினும் அமையும்; மெய்யன்பர்கள் குற்றங்கள் செய்யினும் குணமெனக் கொள்வன் என்பது கருத்து.