|
பாடல் எண் :1237 | சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப் படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே. |
| 5 | பொ-ரை: சுடரைப் போல் ஒளிர்கின்ற வெண்ணீற்றுப் பொடியணிமேனியனை, பூவிதழும் (பிறவும்) சென்னியிலே வைத்த அமுதனையானை, படர்ந்த செஞ்சடையிலே பால் போன்ற மதியைச் சூடியவனை, இடர்கள் நீக்கும் இறைவனை யான் கண்டது வெண்ணித் தலத்திலாகும். சடைநெருங்கிய சென்னியில் அமுது (நீர் - கங்கை) வைத்தவனை - எனினும் அமையும். (வைத்த அமுதினை என்பதைஅருங்கேடன் என்பது போலக் கொள்க) கு-ரை: சுடரைப்போல் ஒளிர் - சூரியனைப்போல் வெள்ளிதாய் ஒளிவிடுகின்ற. சுண்ண வெண்ணீற்றனை - திருவெண்ணீற்றுப் பொடி அணிந்தவனை. அடர் - பூவிதழ். அடியார் சூட்டும் பூவிதழும், இலையும் சென்னியில் ஏற்றருளும் அமுது போன்றவன் என்க. அடரும் சென்னியில் அமுதுவைத்தவனை எனினும் அமையும். அமுது - தண்ணீர், கங்கை. படரும் -விரிந்துள்ள. செஞ்சடை - சிவந்த சடை முடியின்மீது. பால்மதி - பால்போன்ற வெண்மையான சந்திரன். சூடியை - சூடியவனை. இடரை நீக்கியை - துன்பங்களை நீக்கியவனை. |
|