பாடல் எண் :1238
பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாதனை நல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.

6
பொ-ரை: பூதங்களுக்குத் தலைவனை, பூக்கள் நிறைந்த புகலூரனை, மகரந்தம் போல் தவழும் மதியைச் சூடியவனை, தலைவனை, நான்மறை ஓதியவனை, வேதப்பொருளானவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன்.
கு-ரை: பூதநாதன் - பூதகணங்களுக்குத் தலைவன். பூதம் - உயிர் எனினும் அமையும். தாதெனத் தவழும்மதி - மகரந்தம் போன்ற மஞ்சளும் வெண்மையுங்கலந்த நிறமுடைய பிறைமதி. சூடி - சூடியவன். தவழும் - தவழ்கின்ற பிள்ளைமதி எனற்கேற்பத் தவழ்தல் கூறப்பட்டது. நாதன் - தலைவன்.