பாடல் எண் :1239
ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.

7
பொ-ரை: ஒருத்தியை ஒருபாகத்தில் அடக்கியும், மற்றொருத்தியைப் புன்சடையிற் பொருத்திய புனிதனை, கருத்துள் இருப்பவனை, திருநீலகண்டனை, கண்ணுதலானை, நிருத்தம் ஆடுவானை, நேற்று வெண்ணியிற்கண்டு ஏத்தினேன்.
கு-ரை: ஒருத்தி - பார்வதி. ஒருபாகத்து - இடப்பாகத்தே. அடக்கியும் பொருந்திய - கூட்டியும் ஒன்றாகச் செய்த; முன்பே ஒன்றாந் தன்மையோடிருந்ததேயன்றி தன்னுடம்பினொரு கூறாந் தன்மையை அளித்தும் ஒன்றாகச்செய்த. புனிதன் - தூயன். புரி - முறுக்கேறிய. கருத்தன் - கருதுவார் கருத்துள் நிற்பவன். கண்ணுதல் நிருத்தன் - கண்ணுதலை உடைய நிருத்தன். நிருத்தன் - ஆடல் வல்லான்.