பாடல் எண் :1245
தனகி ருந்ததொர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.

2
பொ-ரை: நீங்கள் உள்ளக்களிப்பு மிக்கு உடையீராயினும். நுமது இழிவு நீங்குதற்கு முதல்வனைத் தொழுமின்கள்; கனகப் பொன்சடையான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நினையும் வல்லமை பெற்றவர் விசும்பு ஆள்வர் ஆதலால்.
கு-ரை: தனகு - உள்ளக்களிப்பு; இதனை உடையோர் செய்வது அறியமாட்டார். அன்னோர் முதல்வனை உணராமையின் இழிஞர், அல்லது குற்றம் உடையோர் ஆவர். அவ்விழிவு நீங்கி உய்தற் பொருட்டு அன்னோரைத் 'தொழுதெழுக' என உணர்த்துகின்றார் சுவாமிகள். முனகு - இழிவு, குற்றம். சிவபிரானை நினைந்தெழுவார் முத்திபெறுவது சரதம் ஆகலின், உள்ளக் களிப்புள்ள உலகரையும் தொழுதெழுக என்றருளிச் செய்தபடி.