பாடல் எண் :1250
அரிய நான்மறை யாறங்க மாயைந்து
புரியன்தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.

7
பொ-ரை: அறியாமை உடைய நெஞ்சமே! அரிய நான் மறைகளாய் உள்ளவனும், அன்னமயகோசம் முதலிய ஐங்கோசங்களாகப் பேசப்பட்டவனும், தேவர்கள் வேண்ட நஞ்சுண்டவனும், அதனாற்கறுத்த கண்டத்தினானுமாகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி நினைப்பாயாக.
கு-ரை: அரிய - உணர்தற்கருமையான. நான்மறை - இருக்கு, யகர், சாமம், அதர்வணம், ஆறங்கம் - சிக்ஷை, நிருத்தம், கல்பம், வியாகரணம், சந்தோவிசிதம், சோதிடம், ஐந்து புரியன் - அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்னும் ஐங்கோசங்களாக எண்ணப்படுபவன். இவை உயிர்க்கு இடமாகலின் புரி எனப்பட்டன. மட நெஞ்சமே! - இந்நாள்வரை அறியாதிருந்த மனமே! கடம்பந்துறையை உரியவாறு நினை என்க.