|
பாடல் எண் :1251 | பூமென் கோதை யுமையொரு பாகனை ஓமஞ் செய்தும் உணர்மின்க ளுள்ளத்தால் காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை நாம மேத்தநம் தீவினை நாசமே. |
| 8 | பொ-ரை: பூவணிந்த மென்கோதை உடையவளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனை வேள்விகள் செய்தும், உள்ளத்தால் உணர்வீர்களாக! மன்மதனைச் சினந்த பெருமான் உறையும் கடம்பந்துறையில் அத்திருநாமம் ஏத்த நம் தீவினைகள் நாசமாம். கு-ரை: பூமென்கோதை - பூக்களை அணிந்த மெல்லிய கூந்தலை உடையாளாகிய. ஓமம் செய்தும் - பூவும் நீரும் கொண்டு பூசித்தலோடு வேள்விசெய்தும். காமன் - மன்மதனை. நாமம் - திருப்பெயர். |
|