பாடல் எண் :1253
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலா னைந்துட னாடும் பரமனார்
காலா லூன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே.

10
பொ-ரை: பாலோடு கூடிய ஆனைந்தும் ஆடும் பரமனும், அரக்கனைக் காலால் ஊன்றி உகந்த பெருமானும் ஆகிய இறைவனைக் கடம்பந்துறையிற் சென்று வழிபட்டால், நாம் செய்த மேலை வல்வினைகள் கெடும். ஆதலால், துன்பங்கெடும் படியாக நூல் அறிவால் நன்றாக நினைத்து வழிபடுவீர்களாக. (நூல் அறிவு - சிவாகம உணர்வு.)
கு-ரை: நூலால் - சைவாகம விதிப்படி, நன்றா - குற்றமின்றி. நோய் கெட நினைமின்கள் என்க. நோய் - பிறவித்துன்பம். பாலான் ஐந்து - பால் முதலிய ஆனைந்து என்க. ஆனைந்து - பஞ்சகவ்வியம். ஆடும் - அபிஷேகம் கொள்ளும். காலால் ஊன்றுகந்தான் - அரக்கனைக் காலால் ஊன்றுதலை உகந்தவன். மேலால் நாஞ்செய்த வல்வினை - முற்பிறவியில் நாம் செய்த வலிய வினை.