பாடல் எண் :1258
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையு முள்ளத் தவர்வினை நீங்குமே.

5
பொ-ரை: சுனையுள் பூத்த நீலமலர் போன்ற கண்டத்தனும், புனையும் பொன்னிறக் கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும்.
கு-ரை: சுனை - மலையிடத்துத் தானே தோன்றிய நீர்நிலை. நீல மலர் - குவளைமலர். அன - ஒத்த. புனையும் - அணியும். கனையும் - ஒலிக்கும். கொன்றை, புரிசடை, கழல் இவற்றை உடையான் என்க.