பாடல் எண் :1261
அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யால்தொழு வார்வினை சாயுமே.

8
பொ-ரை: உமையம்மை உடனிருந்து மகிழ்ந்து பாட அங்கையில் அழல் ஏந்தி நின்று ஆடல் புரிபவன், ஆய கங்கையுறையும் சடையான் வீற்றிருக்கும் கரக்கோயிலைத் தம்கையால் தொழுவாருடைய வினைகள் வலியற்றுக்கெடும்.
கு-ரை: அங்கை - அகங்கையிலே. ஆர் அழல். தாங்குதற்கு அரிய நெருப்பை. ஆடலன் - ஆடுதலைச் செய்பவன். மங்கை - பார்வதிதேவியார். மங்கைஉடன் (இருந்து) மகிழ்ந்து பாட ஏந்தி ஆடலன் எனக்கூட்டுக. சாயும் - வலியற்றுக் கெடும்.