|
பாடல் எண் :1265 | ஒருவ ராயிரு மூவரு மாயவன் குருவ தாய குழக னுறைவிடம் பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ் கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே. |
| 1 | பொ-ரை: ஒருவராய், இருவராய், மூவராய் நிற்பவனும் குருவடிவுமாகிய குழகன் உறைவிடம், பருத்த வரால் மீன்கள் குதித்தலைக் கொள்ளும் பழனங்கள் சூழ்ந்த இடமாகிய கடம்பூர்க்கரக்கோயிலே. கு-ரை: ஒருவராய் - சத்தியைத் தன்னுருவத்தினுள் அடக்கிச் சிவன் என ஒருவராய். இரு மூவருமாய் என்றதை இருவருமாய் மூவருமாய் எனக்கொள்க. இருவருமாய் - சத்தி சிவம் என்ற பிரிப்பில் இருவரும் ஆகி. மூவருமாயவன் - படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்புரிய அரி அயன் அரன் என்ற மும்மூர்த்திகளாயவன். 'ஓருருவாயினை மானாங்காரத்து ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை' (தி.1.ப.128) என்பது முதலிய திருமுறை மேற்கோள்களால் உணர்க. குருவதாய குழகன் - தென்முகப் பரமனாய் குருநாதனாக வீற்றிருந்து மௌனோபதேசம் செய்த இளையோன். பருவரால் - பெரிய வரால் மீன்கள். பழனம் - மருதநிலம்; வயலும் வயல் சார்ந்த இடங்களும். கருவதாம் - எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிய. |
|