பாடல் எண் :1266
வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

2
பொ-ரை: வன்னியும், ஊமத்தமலரும், வளர் இளந்திங்களும், கங்கையும் ஆகியவற்றைக் கதிர்விரிக்கும் முடியில் வைத்தவன், பொன்னின் நிறைந்து புணர்முலையாளாகிய உமாதேவியோடும் கடம்பூர்க் கரக்கோயிலில் நிலைபெற்றவன் ஆவன். (எல்லாம் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய் இருந்தருள்கின்றான் என்பது கருத்து.)
கு-ரை: மத்தம் - ஊமத்தம்பூ. வளர் இளந்திங்கள் - வளர்கின்ற இளைய திங்கள். ஓர்கன்னியாள் - ஒப்பற்ற கன்னியாகிய கங்கை. கதிர்முடி - ஒளிவிடும் முடி. பொன்னின் - பொன்போல. மல்கு - ஒளிசெறிந்த. புணர்முலை - செறிந்த தனங்கள். மன்னினான் - நிலைத்து வீற்றிருந்தான். அன்பர் அணியும் எளிய பொருள்களையும் ஏற்று. சார்ந்தாரைக் காத்து, செருக்கின் மிக்கார் வலிபோக்கி உயிர்களுக்குப் போகத்தை விளைவிப்பன் என்பது கருத்து.