|
பாடல் எண் :1269 | திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர் மங்கை தங்கும் மணாள னிருப்பிடம் பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலும் தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. |
| 5 | பொ-ரை: இடப்பாகத்தே பார்வதியைக் கொண்டதன்றி, திங்கள் பொருந்திய செஞ்சடை மேலும் ஒரு மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம், மணல் நிறைந்த பகுதியில் புன்னையும், புலிநகக் கொன்றையும், தென்னையும் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும். கு-ரை: மேலும் என்பதில் உள்ள இறந்தது தழீஇய எச்ச உம்மை இடப்பாகத்தில் ஒருத்தியைக் கொண்டிருப்பதோடன்றி என்பதைக் காட்டிற்று. ஓர் மங்கை - ஒரு பெண்; கங்கை. மணாளன் - என்றும் மணக்கோலங்கொண்டிருப்பவன். பொங்குசேர்மணல் - மிகுந்த மணற்பரப்பு. ஞாழல் - புலிநகக் கொன்றை. தெங்கு - தென்னை. உம்மை விரித்துரைக்க. உமையொரு பாகனாய் உலகத்தைப் படைப்பதோடு அதனை அழியாமைக் காப்பவனும் சிவபிரான் என்றபடி. |
|