பாடல் எண் :1275
என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.

1
பொ-ரை: என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான்; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன்.
கு-ரை: என்னில் - என்னைக்காட்டிலும். ஆரும் - யாரும். இனியார் - இனிமையைச் செய்வார். என்னிலும் இனியான் - எனக்கு என்னிலும் இனியான். என்னுளே - என் உடம்பிற்குள்ளே. உயிர்ப்பாய் - பிராணனாய். புறம்போந்து - வெளிவந்து. உள்புக்கு - உள்ளே சென்று மீளத்தங்கி. என்னுளே - என் உள்ளத்திற்குள்ளே. நிற்கும் - நிலைத்து எழுந்தருளியிருப்பான்; அவன் யாரெனில் இன்னம்பர் ஈசன் என்க. ஆன்மார்த்த சிவபூசையில் உள்ளக் கமலத்து வீற்றிருக்கும் இறைவினை வெளியில் மந்திர பூர்வகமாக வெளிக்கொணர்ந்து ஆவாகனம் செய்து மீண்டும் தனக்குள் ஒடுக்கும் நிலையைக் குறித்தது. உயிர்ப்பு - உச்சரிக்கப்படும் மந்திரம்.