பாடல் எண் :1276
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணர்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே.

2
பொ-ரை: கள்ளுண்பவர்களும், பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை? தட்டி முட்டித் தள்ளாடிவிழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ?
கு-ரை:மட்டு - கள். வாட்கணால் கட்டுண்பார்கள் - வாள்போன்ற கண்களால் பிணிக்கப்படுவார்கள். மட்டுண்பார்களும் கட்டுண்பார்களும் தள்ளாடித் தடுமாறும்போது இன்னம்பர் ஈசனையன்றிக் கருதுவது என் என முடிக்க. உயிர்கொண்டு போம் பொழுது ஈசனையன்றி உற்றார் இல்லை என்றபடி. தட்டிமுட்டித் தள்ளாடி என்றது - கண் பார்வையும் உடல் வலியும் இழந்து நிற்கும் முதுமை நிலையைக் குறித்தது. எட்டு மூர்த்தியர் என்பது இறைவன் எல்லாமாய் நிற்கும் நிலைகருதி வழிபடற்பாலர் என்றபடி.