பாடல் எண் :1278
மழைக்கண் மாமயி லாலு மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்த மன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.

4
பொ-ரை: மழைக்காலத்தில் கரிய மயில்கள் ஆரவாரிக்கும் மகிழ்ச்சியைப் போன்று மகிழ்ந்து அழைக்கும் தன்னடியார்களின்அன்பினைத் தன்பாற் குறிக்கொள்ள வேண்டிக் குழைக்கும் பெருமை உடையவன் என்மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவன்.
கு-ரை: மழைக்கண் - கார்காலத்து மழையின்கண். மா - சிறந்த. ஆலும் - ஆரவாரிக்கும். மகிழ்ச்சியான் - மகிழ்ச்சியோடு. அழைக்கும் - அழைக்கின்ற. தன் - அப்பெருமான் தன். அடியார்கள் தம் - அடியார்களுடைய. அன்பினை - அன்பை. குழைக்கும் - குழையச் செய்யும். தன்னைக் குறிக்கொளவேண்டி - தன்னையே குறிக்கோளாக அடையவேண்டி. இழைக்கும் - தன் உருவைப் பொருந்தச் செய்யும். இன்னம்பர் ஈசன் என்மனத்துத் தன்னைப் பொருத்துவான் என்க.