பாடல் எண் :1281
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணால்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே.

7
பொ-ரை: கங்கையாள் சடைக்கண் உள்ளாள்; அவன் கையது அனல். அக்கங்கையாகிய மங்கை ஒரு கடைக்கண்ணால் நோக்க, இமவான் மகளாம் பார்வதி தனது படையனைய கண்களால் அழகைப் பருகநிற்பவன்; நமக்கு துன்பக் காலத்துப் பற்றக்கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன்.
கு-ரை: சடைக்கணாள் புனலாள் - சடையின்கண் தங்கியிருப்பவள் கங்கை. அனல் கையது என்க. கங்கையாகிய மங்கை கடைக்கண்ணால் நோக்க இமவான்மகள் படைக்கணால் பருகப் படுவான் எனக் கூட்டுக.
அகரம் தொகுத்தல் விகாரம். இமவான் மகள் மங்கை - பார்வதி. நோக்க - பார்க்க. படைக்கணால் - வேல் கணை வாள் முதலிய ஆயுதங்கள் போன்ற தன் கண்களால். பருகப்படுவான் - பார்த்து உண்ணப்படுபவன். நமக்கு இடைக் கண்ணாய் நின்ற - நமக்குத் துன்பத்துக்கண் தோன்றி நின்ற.