பாடல் எண் :1292
காமி யஞ்செய்து காலங் கழியாதே
ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சு வதியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.

8
பொ-ரை: பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து, தன் கணவனாகிய பிரமனோடு சரசுவதியும் கோமி (கோதாவரி)யும், உறையும் குடமூக்கிற் பெருமானை, உள்ளத்தே உணர்வீர்களாக!
கு-ரை: காமியம் - மனம் விரும்பியவை. ஓமியம் - ஓமகாரியம். புறத்தே அக்னிகாரியத்தையும் அகத்தே ஆறாதார யோகத்தையும் உணர்த்தும். குண்டலிகத் தானமான உந்தியில் ஞானஅனலை எழுப்பி அதனுள் விந்துத் தானத்து அமிழ்தமான நெய்யைச் சுழுமுனை இடை நாடிகளாகிய சுருக்கு சுருவங்களால் ஓமித்தல். உள்ளத்து அர்ச்சித்தலாவது - புறப்பூசை போல அகத்தே கொல்லாமை முதலிய அட்ட புட்பங்கொண்டு வழிபடல். சாமி - சாமை நிறமுடைய யமுனை ஆகலாம். கோமி - கோதாவிரி. "தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரைபுட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை" (தி.6.ப.75.பா.10.)