பாடல் எண் :1298
பறையி னோசையும் பாடலி னோசையும்
மறையி னோசையும் மல்கி யயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையு மீசனை யுள்குமென் னுள்ளமே.

4
பொ-ரை: பறையின் ஓசையும், தெய்வப்பாடல்களின் ஓசையும், வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது.
கு-ரை: பறை - தோற்பறை; வாத்திய விசேடம். மல்கி - நிறைந்து. அயல்எலாம் - ஊர்ப்புறமெங்கும். நிறையும் - நிறைகின்ற. பூம்பொழில் - பூக்களை உடையதாகிய சோலை. உள்கும் - எண்ணும்.