பாடல் எண் :1300
உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனில்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.

6
பொ-ரை: உரைப்பக் கேட்பீராக; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை, வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில்மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின், அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர்.
கு-ரை: நும் உச்சியுளான் - உங்கள் தலைமேல் உள்ளவனாகிய பெருமான். நிரைப்பொன் - வரிசையான அழகிய; மா - பெரிய. உரைப்பொன் - மாற்றுரைக்க வைத்த பொன். இவர் ஆரோ என்னில் எனக்கூட்டுக. திரைத்து - அலைத்து. அழித்து. திரிதரும் - அலையும்.