|
பாடல் எண் :1301 | கன்றி யூர்முகில் போலுங் கருங்களிறு இன்றி ஏறல னாலிது என்கொலோ நின்றி யூர்பதி யாக நிலாயவன் வென்றி யேறுடை யெங்கள் விகிர்தனே. |
| 7 | பொ-ரை: திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும், வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன், கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ? கு-ரை: கன்றி - கறுத்து. ஊர்முகில் - வானத்தே மெதுவாய்ச் செல்லும் மேகம். கருங்களிறு. கரியயானை. யானையைக்கொள்ளாது ஏற்றைக்கொண்ட பெருமான் நடந்து வருதல் என்ன காரணமோ என்க. ஏறலனால் - ஏறாதவனாயினான். இது என்கொலோ - இதற்குக் காரண மென்னவோ? "கடகரியும் பரிமாவும் தேருமுகந்தேறாதே இடப முகந்தேறியவாறு". நிலாயவன் - விளங்கியவன். வென்றியேறு - வெற்றிக்குரியதாகிய எருது. விகிர்தன் - மாறுபட்ட செயல்களை உடையன்; ஏறுடையவன். |
|