பாடல் எண் :1308
சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையு மொருவரே.

4
பொ-ரை: மற்றையூர்களிலெல்லாம் சென்று பலி தேர்ந்து பெற்று மீண்டுபோய் ஒற்றியூரிற்புக்கு உறையும் ஒப்பற்றவராகிய இறைவர் பாய்கின்ற புலியினையுரித்த தோலுடையினராய், சுற்றி நிற்கின்ற பேய்கள் சுழலச் சுடுகாட்டின்கண் கையில் எரியினைப் பற்றி ஆடும் இயல்பினர்.
கு-ரை: சுற்றும் - சுற்றிலும். சுழல - தம்மோடு சுழல. எரிபற்றி - எரியேந்தி. பாய்புலி - பாய்கின்ற புலி. பலிதேர்ந்து - இரந்துண்டு. எல்லா ஊர்களிலும் சென்று பலியேற்று ஒற்றியூரை உறையும் இடமாகக் கொண்ட ஒருவர் என்பதாம். ஒருவர் - ஏகன் என்று வேதாந்தங்களால் கூறப்படும் முதல்வன்.