பாடல் எண் :1310
போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

6
பொ-ரை: போதுகளைவிட்டுப் பூத்த புதுமலர்களைக் கொண்டு கங்கையைத் தாழ்சடையின் கண் வைத்த மணாளனாரும், திருவொற்றியூரில் வேதம் ஓதும் வித்தகரும் ஆகிய பெருமானின் திருவடிகளை ஏத்தினால் நம் பாவங்கள் கெடும்.கு-ரை: போது - காலந்தோறும் எனலும் ஆம். தாழ்ந்து - வணங்கி அல்லது மனம் விரும்பி. நீர்மாது - கங்கை. தாழ்சடை - தங்கியுள்ள சடை. ஓதுவேதியனார் - வேதங்களை ஓதியருளியோன். எல்லாராலும் புகழ்ந்தோதப்படும் வேதம் விரித்த பெருமான் எனலுமாம். பறையும் - அழியும். ஒற்றியூர் மணாளனார் பாதமேத்தப் போது தாழ்ந்து புதுமலர்கொண்டு ஏத்த நம் பாவம் பறையும்.